Tuesday 21 April 2015

தயவுசெய்து படியுங்கள்


                                                                                தயவுசெய்து படியுங்கள்
கல்லூரிகளில் முதுநிலை பொறியியல் [M.E], முதுநிலை கணிணி பயன்பாட்டியல்[M.C.A], மற்றும் முதுகலை மேலாண்மை [M.B.A] படிப்புகளில் சேருவதற்கான TANCET தேர்வு வரும் மே மாதம் நடைபெற உள்ளது . முதுநிலை படிப்புகளில் சேர ஆர்வமுள்ளவர்கள், தயவுசெய்து விண்ணப்பிக்கவும். முக்கியமாக, முதுநிலைப் படிப்பு படிக்க விரும்பும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து, தவறாமல் தேர்வினை எழுதுங்கள்.
     தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த நிறைய , நல்ல அறிவுள்ள, சிந்திக்கத் தெரிந்த மாணவர்கள் பலரும், முதுநிலை படிப்புப் படிக்க ஆர்வமிருந்தாலும், பணமில்லை என்ற ஒரே காரணத்திற்காக, முதுநிலைப் படிப்புகளில் சேர்வதில்லை.
     ஆனால், மத்திய, மாநில அரசுகள் தாழ்த்தப்பட்டவர்கள் முதுநிலைப் படிப்புப் படிக்க, ஏராளமான சலுகைகளை வழங்குகின்றன.
எனக்குத் தெரிந்து, முதுநிலைப் பொறியியல் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்லூரிக் கட்டணம் முழுமையும் அரசே செலுத்திவிடும். எனவே, பரிட்சை மற்றும் புத்தகச் செலவுகளைத் தவிர்த்து ஒரு பைசாக் கூட செலவில்லாமல், முதுநிலைப் பொறியியல் படிக்கலாம். இது 100 சதவிகிதம் எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், எனக்கு மற்ற படிப்புகளில் உள்ள சலுகைகள் பற்றித் தெரியவில்லை.
 இந்த சலுகையை TANCET தேர்வெழுதி, கலந்தாய்வு [counseling] மூலம் கல்லூரியில் சேரும் மாணவர்களே முழுமையாகப் பெற முடியும். கலந்தாய்வு இல்லாமல் கல்லூரிகளில் நேரடியாக் சேருபவர்கள், அந்தக் கல்லூரிகள் நிர்ணயிக்கும் கட்டணத்தைப் பொறுத்து, 25% முதல் 75%  வரை மட்டுமே அரசிடமிருந்துப் பெற முடியும்.
நிறைய மாணவர்களுக்கு இதுபோன்று தங்களுக்கு நியாயமாகக் கிடைக்கக் கூடிய சலுகைகள் பற்றித் துளியும் தெரியவில்லை. தெரியப்படுத்த வேண்டியவர்களும், தெரியப்படுத்துவதில்லை. இதில் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டோர் என வித்தியாசமே இல்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்து என்னவென்றால், முதுநிலைப் படிப்பு படிக்க ஆர்வமில்லை என்றாலும் கூட இதுபோன்ற போட்டித் தேர்வுகளை தாராளமாக எழுதலாம், இதனால் நன்மையே தவிர, துளியும் தீமையில்லை.
எனவே, இளநிலைப் படிப்பை முடிக்கப் போகும் மாணவர்கள், முதல் வேலையாக, TANCET விண்ணப்பித்து,தேர்வினை எழுதுங்கள். பின், , தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, முதல்தலைமுறைப் பட்டாதாரிகள், மற்றும் மாணவிகளுக்கென்று அரசங்கத்தால் வழங்கப்படும் சலுகைகள் என்னென்ன, தகுதிகள் என்ன, எவ்வளவு உதவிக் கிடைக்கும் எனத் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.
 இப்பொழுதே நீங்கள் படிக்க விரும்பும் கல்லூரிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு,பின், அந்தக் கல்லூரியில் அராசாங்கத்தின் சலுகைகள் சரிவரக் கிடைக்கிறதா என்று விசாரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
மேலும், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இதுபோன்ற நிறையப் போட்டித் தேர்வுகள் , பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் நடைபெறும், எனவே மாணவர்கள் தங்களுக்கு ஆர்வமுள்ள, துறைகளில் உள்ள போட்டித் தேர்வுகளைக் கண்டறிந்து விண்ணப்பியுங்கள்.
இதைப்போன்றே, இளங்கலைப் படிக்கப்போகும் மாணவர்களுக்கும் நிறையத் தேர்வுகள் நடைபெறும்.
உங்களுக்கு நன்மைத் தரும் அணைத்தையும் தேடித் தேடி அறிந்துக் கொள்ளுங்கள்.
கல்வி சம்பந்தப்பட்ட செய்திகளை அறிந்துக் கொள்ள்த் தனிப்பட்ட முறையில்புதியத் தலைமுறைக்கல்விஇதழையும், “எப்ளாய்மெண்ட் சர்வீஸ்வார நாளிதழையும் பரிந்துரைக்கிறேன்.


பின்குறிப்பு: இந்தப் பதிவை +2 முடிக்கும் மாணவர்களோ அல்லது இளநிலை கல்லூரிப்  படிப்பை முடிக்கும் மாணவர்களோ படிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கில்லை, எனவே இப்பதிவைப் படிப்பவர்களில் யாரேனும், தயவுசெய்து, தங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு எடுத்துக் கூறி வழிநடத்துமாறுக் கேட்டுக்கொள்கிறேன்.

Sunday 19 April 2015

தந்தியும், தமிழ் ஹிந்துவும்


எனது அறிவைப் பற்றி எனக்கு எப்பொழுதுமே ஒரு ஐயம் இருந்து வருகிறது. அது என்னவென்றால், உண்மையிலேயே எனக்கு அறிவு இருக்கிறதா, அல்லது இல்லாததை இருப்பதுபோல் கற்பனை செய்துக் கொள்கிறேனா? என்பதுதான் அது.

 அதுவும் தமிழ் ஹிந்துவில்,

”தந்தி தொலைக்காட்சியில் திராவிடர் கழக மறுப்பின் திரிபுவாதம்!” 

எனறத் தொடரைப் படித்தவுடன் ஐயம் இன்னும் அதிகமாகி விட்டது.

தமிழ் ஹிந்துவில் அந்த நேர்காணலை பற்றின தொடர்களைப் படித்தப் பின் தான் அந்த நேர்காணலைப் பார்த்தேன். நொந்துவிட்டேன்.

அந்த நேர்காணல் பற்றி பகுத்தறிந்துப் பார்த்ததில், எனது சிற்றறிவுக்கு எட்டியவை,


“ மிக மிக சாதாரணமான உரையாடல்”.

பாண்டேவின் கேள்விகள் எதுவுமே புதிதல்ல
 திராவிட கழகத்தினை அவமானப்படுத்தும் நோக்கில் கேட்கப்படவில்லை.

நிச்சயமாக, வீரமணி அவர்கள் பதிலளிக்க திணறவில்லை


  
பாண்டேவின் இந்தக் கேள்வியைப் பாருங்கள்,

இந்துக்களையும், பிராமணர்களையும் நீங்கள்(தி.க) குழப்பிக்கொள்ளுகிறீர்களா?

இந்தக் கேள்வி என்னை மிகவும் குழப்பிவிட்டது. இந்து மதத்தில் தானே பிராமணர்கள் இருக்கிறார்கள், அப்புறம் எப்படி இரணடையும் குழப்பிக்கொள்ள முடியும்,

ஒருவேளை, பாண்டேவின் கருத்துப்படி, பிராமணர்கள் இந்துக்கள் இல்லையோ?

அதன் பின் ஒரு கேள்விக்கு, அணைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், என்ற சட்டத்தை தி.க  முயற்சி செய்து கொண்டு வந்ததாக என வீரமணிக் கூற,  பாண்டே உடனே ஒரு எதிர்க் கேள்விக் கேட்கிறார் பாருங்கள் , “அணைத்து சாதியினருக்கும் என்று தானே சொல்கிறீர்கள், தாழ்த்தப்பட்டவருக்கு என்ன செய்தீர்கள்?”

கோவிலுக்குள்ளேயே நுழையக் கூடாது எனத் தடுக்கப்பட்ட மக்கள், கருவறைக்குளேயே சென்று வழிபாடு நடத்தலாம் எனற சட்டம், எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது.

ஒருவேளை, பாண்டேவின் கருத்துப்படி, தாழ்த்தப்பட்டவர்கள் என்பது சாதிப் பிரிவு இல்லையோ?

 அதேபோல், மனமுதிர்ச்சியற்றத் தன்மையினால் உருவான, அமெரிக்க நிறவெறியையும், கடவுளின் பெயரால், ஒருவனைத் தாழ்வாக நடத்திய இந்திய சாதி வெறியையும் பாண்டே ஒரே தட்டில் வைக்கிறார்.

அமெரிக்க கருப்பினத்தவர், கடவுள் துணையைத் தேட தடையேதுமில்லை, ஆனால் இந்தியத் தாழ்த்தப்பட்டவர்கள் உருவானதே கடவுளின் பெயரால்தானே?

 இந்த நிகழ்ச்சியில், பாண்டேவால் கேட்கப்பட்ட சரியான ஒரு கேள்வி என்னவென்றால்,” முஸ்லிம் பெண்கள் பர்தா அணியும் முறையை எதிர்த்து தி.க ஏன் போராடவில்லை?”, என்பதே.

இந்தக் கேள்வி உண்மையில் நியாயமான, நடுநிலையானக் கேள்வி.ஆனால் இதற்கு, வீரமணி சரியான பதிலை அளிக்கவில்லை. ஏனென்றால், பர்தா முறைக்கு எதிராக தி.க தீவிரமாக போராடவில்லை என்பதே உண்மை. மாறாக, ”தி.க வுக்கும், இஸ்லாமியர்க்கும் சண்டையை மூட்டி விடுகிறீர்களா?” என்று பாண்டேவைப் பார்த்துக் கேட்கிறார்.

இந்த ஒருக் கேள்வி மட்டும் தான், அந்த நிகழ்ச்சியிலேயே உருப்படியானக் கேள்வி, மிகவும் தேவையானக் கேள்வியும் கூட.

இதைத் தவிர தமிழ் ஹிந்து இணையதளம் ஒருத் தொடரையே எழுதுமளவுக்கு ஒன்றுமில்லை. தி.கவைப் பற்றியோ, பெரியாரைப் பற்றியோ, அந்த நிகழ்ச்சியில் எனக்குத் தெரிந்து, சொல்லிக் கொள்ளும்படி எதுவுமில்லை. அல்லது என் சிற்றறிவுக்க்குத்தான் எட்டவில்லையோ என்னவோ?

தவிர, தமிழ் ஹிந்துவில் அவ்வப்போது, சில நல்லத் தொடர்களும் வருகின்றன. கம்பராமாயணத்தையும்,  வால்மீகி ராமாயணத்தையும் ஒப்பிட்டு வந்த ஒரு தொடர் என் விருப்பத்துக்குரிய ஒன்று.

Thursday 16 April 2015

என் வாழ்க்கை ----- ஈ.வெ.ராமசாமி என்னும் பெரியார் இல்லாமல்


    இப்பொதெல்லாம், இணையவெளியில் பெரியாரைப் பற்றி நிறைய விமர்சனங்கள் கண்ணில் படுகின்றன. பெரியாரை தமிழ் விரோதி என்றும் சுய ஜாதி அபிமானம் உள்ளவர் என்றும் விமர்சிக்கிறார்கள். இவையெல்லாம் உண்மையாகவே இருக்கலாம், அல்லது இல்லாமலும் போகலாம், ஆனால் பெரியார் என்கிற ஈ.வெ.ரா பிறக்காமல் இருந்திருந்தால், என்னுடைய அறிவிற்க்கு, என் வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்கும்,


1. பிரேமானந்தா, நித்தயானந்தா, சிவசங்கர் பாபா, ஈசா போன்ற போலிச் சாமியார்களின் தலைசிறந்த பக்தனாயிருந்திருபேன் [ இதை சொல்லவே எனக்கு அருவெருப்பாயிருக்கிறது,கற்பனைதானே]

2. நாட்டில் இவ்வளவு கற்பழிப்பு, திருட்டு சம்பவங்களுக்கு மனுதர்மப்படி ஆட்சி செய்யாததே காரணம் என வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு  வியாக்கியானம் பேசுவேன்.

3.ஜெயலலிதா ஒரு பிராமணர் என்பதால், ஊழல் செய்திருக்க மாட்டார், அப்படியே அவர் ஊழல் செய்திருப்பது நிரூபிக்கப்பட்டாலும், அவர் பிராமணர் என்பதால் அவருக்கு சிறைத்தண்டனையெல்லாம் விதிக்காமல், வேறு ஊருக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ அனுப்பிவைப்பதே சரியான தண்டனை எனக் கோபப்பட்டுக் கொநதளிப்பேன்.

4.தாழ்த்தப்பட்டவானாயிருந்தால், அக்ரஹாரத் தெருவில் நுழையவே பயப்படுவேன், பிராமணனாயிருந்தால் வேறு சாதியினர் என்னைத் தொடவிடவோ அல்லது நான் அவர்களைத் தொடவோ மாட்டேன்.

5. கலப்புத் திருமணம் நடந்தால், நாட்டுக்கு ஏதோ தீங்கு ஏற்படும் என் பயந்து, சாதி கலவரங்களுக்கெல்லாம் தூண்டுகோலாய், வெட்டுக்கோலாய், கொன்று குழித்தோண்டிப் புதைக்கும் கோலாய் இருந்திருப்பேன்.

6.பிள்ளையார், இன்னும் பால் குடித்துக்கொண்டிருப்ப்பார்.

7.அலங்கார வளைவுகளில், கையில் தீபம் ஏந்தி இருப்பெண்கள் வரவேற்பது போன்ற சிலைகளிருக்குமே, அவற்றையும் கடவுள் என எண்ணி பயபக்தியோடு வணங்கியிருப்பேன்.

8.சாணி அள்ளி, வீடு வாசல் கூட்டி, சோறாக்கி, துணிததுவைத்து, எச்சில் பாத்திரம் விளக்கி, பிள்ளைப் பெற்றுப் போடுவதாற்க்காகத்தான் பெண்கள் பிறந்தார்கள் என்பதால், பெண்களை படிக்கவைப்பவர்களை சமூக விரோதிகள் என்பேன்.

9.பில்லி,சூன்யம்,ஏவல் அணைத்தையும் உண்மையென சத்தியம் செயவேன்.

10. பில்லி சூன்யம் வைப்பவர்களெல்லாம், பணக்காரராய் இருப்பதால், நானும் பில்லி சூன்யம் வைக்கக் கற்றுக்கொண்டு பணம் பண்ணியிருப்பேன், இப்படி பொறியியல் படித்து வீணாய் போயிருக்க மாட்டேன்.

11.காந்தி, நேரு மற்றும் இன்ன பிற தலைவர்களின் ஆவிகள், யார் உடம்பிலாவது புகுந்து நமக்கு ஆலோசனைகள் வழங்கிக்கொண்டிருக்கும்.

12.கீதையை கையால் தொட்டிருக்கக் கூட மாட்டேன், அல்லது தொட்டிருக்க முடியாது.

13.தாழ்த்தப்பட்டவனாயிருந்தால் படிப்பெல்லாம் நமக்கில்லை என அ, ஆ க்கூடத் தெரியாத முட்டாளாயிருந்திருப்பேன், பிராமணனாகவோ அல்லது வேறு ஜாதிக்காரணாகவோ இருந்திருந்தால் தாழ்த்தப்பட்டவர்கள் புத்தகங்களைத் தொடவே விட்டிருக்கமாட்டேன்.

14. என் பெயரைக் கேட்டால், ஜாதியையும் சேர்த்தே சொல்லுவேன்.

அப்புறம் தமிழ்நாட்டில்,

ஒவ்வொரு ஜாதிக்கும், ஒவ்வொரு தலைவர்கள் முளைத்து, ஒருவருகொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பார்கள்.

சந்தனக் கடத்தல் வீரப்பன், ராமதாஸின் சீரிய முயற்சியால் சில வன்னியக் குடும்பங்களுக்கு குலதெய்வம் ஆகியிருப்பான்.

தமிழகத்தில் முதல்வர் பதவி, ஒவ்வொரு ஜாதிக்கு ஒரு வருடம் என ஆண்குக்காண்டு முதல்வர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.

தமிழ் சினிமாவில், இந்த ஜாதியை சேர்ந்த, வீரப்புதல்வன் இன்னார் கதாநாயகனாக நடிக்கும், இந்தப் படத்தைக் காண வாரீர் என விளம்பரம் செய்வார்கள்.

ஜாதிப் பெருமை பேசும் படங்கள் அதிகமாக வெளிவந்து வசூலை வாரிக்குவிக்கும்.

இப்படித்தான் என் வாழ்க்கை இருந்திருக்கும்.

இப்படி என்னை மண்ணாந்தையாக வாழ விடாமல், மனிதனாக சிந்திக்க வைத்ததே, பெரியாரின் மிகப்பெரியக் குற்றமாயிருக்கும் என நினைக்கிறேன்


Thursday 9 April 2015

அஞ்சலி-ஜெயக்காந்தன்



     ” பதேர் பாஞ்சாலி” என்னை மிகவும் பாதித்த ஒரு நாவல்.  அதே அளவு பாதிப்பை நான் தங்கர்பச்சானின் “ஒன்பது ரூபாய் நோட்டு” நாவலில் மீண்டும் உணர்ந்தேன். இந்த இரு நாவல்களையும் முடித்தப்பின் அவற்றைக் கீழே வைக்கவே மணம் வரவில்லை எனக்கு. வெகுநாட்கள் அந்த நாவல்களின் கதாப்பாத்திரங்கள், சம்பவங்கள் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருந்தன. ஆனால், இந்த இரு நாவல்கள் தந்த அதே அளவு பாதிப்பை ஒரு சிறுகதை எனக்குத் தந்தது. அந்தக் கதையைப் படித்து இரண்டு வருடம் ஆனாலும், வாரம் ஒருமுறையாவது அந்த சிறுகதை என் நினைவுக்கு வந்து விடும், குறிப்பாக சில வீடுகளின் ஜன்னல்களைப் பார்க்கும் போது.

   “நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்” என்றக் கதைதான் அது. எழுதியது ஜெயக்காந்தன் தான். அதை முதல் முறை படிக்கும் போது என்னால் நம்பவே முடியவில்லை. என்ன ஒரு வித்தியாசமான முயற்சி அது.

    அந்தக் கதையில் உள்ள நுணுக்கங்கள், நான் சிறுகதை எழுதூம் ஆசையை ஆழக்குழித்தோண்டி புதைத்துவிட்டன, எனலாம். முக்கியமாக ஒரு திருமண ஊர்வலம் வரும்போது, அந்தப்பெண் வெட்கப்படுவதையும், யானை ஜென்னல் கம்பி வழியே புகுந்து வீட்டினுள் வருவதையும் சொல்லும் இடங்களில், நானே அந்தப் பெண்ணாக மாறிவிட்டிருந்தேன்.

   ”பனியும் நெருப்பும்” என்ற மொழிப்பெயர்க்கப்பட்ட லத்தின் அமெரிக்க சிறுகதைத் தொகுப்பு ஒன்று. அதில் சேகுவேராவைப் பற்றியக் கதையெல்லாம் வரும். அந்தத் தொகுப்பில், ஒரு கதையில் நாயகனின் வாழ்க்கை பின்னோக்கி செல்வது போல் காட்சியமைப்பு இருக்கும், அதாவது நீரூற்றுகளில் தண்ணீர் வெளியே ஊற்றாமல், உள்ளே செல்லும், முழுமையடைந்தக் கட்டிடங்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்ப நிலைக்கு செல்லும் என்பது மாதிரி. ஜெயக்காந்தனின் “நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்” அதேபோல் காட்சியமைப்புகள் கொண்டதுதான்.

   அந்தக் கதையை விட நான் வியந்தது, ஜெயக்காந்தன் ஒரு பெண்ணின் மனநிலையை எப்படி இவ்வளவுத் துல்லியமாக படம்பிடித்தார் என்பதுதான்.
பெண்ணியம் பேசும், பெண் விடுதலைப் பேசும், தங்களை கம்யூனிஸ்ட் என் அடையாளப்படுத்திக் கொள்ளும் எந்த பெண் எழுத்தாளர்களெல்லாம், இதுபோல் ஒரு படைப்பையும் படைத்ததாகத் தெரியவில்லை. இப்போதெல்லாம் சிறுகதையோ அல்லது ஒரு கவிதையோ, கெட்டவார்த்தைகள் அல்லது இனப்பெருக்க உறுப்புகளையோ  அல்லது ஏதேனும் ஒரு சாதியின் பெயரையோ சொன்னால் அது சிறந்தப் படைப்பாகி விடுகிறது. இனிமேலும், நமது தமிழ் இளம் எழுத்தாளர்கள் ஜெயகாந்தன் போல் படைப்புகளைத் தருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.

  இந்தக் கதையில் ஜெயக்காந்தன், பெண்ணின் உணர்ச்சிகளைக் காட்டவில்லை, உள்ளத்தைக் காட்டியிருக்கிறார், பெண் உடலைக் காட்டவில்லை, பெண்ணைக் காட்டியிருக்கிறார்.

   ஆனாலும், எனக்கு தமிழைத் தவிர வேற்று மொழி இலக்கியங்களில் பரிச்சயம் இல்லாத்தால், இந்தக் கதையை விட சிறந்தக் கதைகள் தானா நோபல் பரிசெல்லாம் வாங்குகின்றன, என்ற ஐயமும் தோன்றுகிறது.

Wednesday 8 April 2015

அஞ்சலி-நாகூர் ஹனிபா

  நாகூர் ஹனிபாவின் குரல் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. இசைப் பண்டிதருடையதா அல்லது பாமரருடையதா என குழம்ப வைக்கும். பண்டிதரையும், பாமரரையும் மயங்க வைக்கும். அவரின் குரல் தமிழில் பாடும் வேறு எந்த பாடகர்களுக்கும் இல்லை. அதுவும் இஸ்லாமிய சமய பாடல்களை பாடும் போது அந்தக் குரலில் ஒரு பணிவு இருப்பதை அறியலாம். அவர் தி.மு.க கழக பாடல்களைப் பாடியதில் எனக்கு துளியும் உடன்பாடில்லை. அதிலும், “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என அவர் படியதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால், இஸ்லாமியர்கள் இறைவனைத் தவிர வேறு யாரையும் வணங்குவதில்லை, ஆனால், நல்ல நல்ல இஸ்லாமிய இறைப் பாடல்கள் பாடிய ஹனிபா, ஏனோ இவ்வாறு சில மனிதர்களைப் பற்றிய சுயபுராண பாடல்களையும் பாடிவிட்டார். 

     இவ்வளவுத் தனித்தன்மையான குரலைத் தமிழ்த் திரையுலகம் துளியும் பயன்படுத்திக்கொள்ளவில்லை, என்பதும் உண்மை. இது நாகூர் ஹனிபாவிற்கு நன்மையே செய்திருக்கும் என நான் உறுதியாய் நம்புகிறேன்( பணம் தவிர) கலைக்காக இல்லாமல், காசுக்காக ஆடும் கூத்தாடிகளின் நட்பு யாருக்கும் நிச்சயம் நன்மையைத் தராது.

   சில பாடல்கள் நம்மை எங்கோ தூக்கி செல்லும். நாகூர் ஹனிபாவின் குரலும் அப்படித்தான், அவரின் பாடல்களைக் கேட்கும் போது நான் அரேபியாவில் இருப்பது போல் உணர்கிறேன். இப்பொது, பெட்ரோல் விற்றுக் கொழுப்பேறிய, மூளை மழுங்கிய அரேபியா இல்லை. 300 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களாய்,இஸ்லாமியராய் அரேபியர்கள் வாழ்ந்திருப்பார்களே அங்கு.

     இப்பொதெல்லாம் சில போலி முஸ்லிம்கள், மதத்தைக் காப்பாற்றுவதாகக் கூறி நடுத்தெருவில் மேடைப் போட்டு கிறுக்குத்தனமாக உளறுவதை நீங்கள் நிறைய இடங்களில் காணலாம். ஆனால், மற்ற மதத்தினரை புண் படுத்தாமல், நான் மதத்தைக் காப்பாற்றுகிறேன் என்று சொல்லாமல், ஹனிபா இஸ்லாமியரை அவர் பாடல்கள் மூலம் நல்வழிப்படுத்தியுள்ளார் என்றால் மிகையாகாது. 

    அவருடைய, சமயப் பாடல்களைக் கேட்கும் போது இது இஸ்லாமியருக்கான் பாட்டு, இந்துக்களுக்குக் கிடையாது என்றெல்லாம் தோன்றாது. ” பள்ளி செல்ல மனமில்லையோ” என அவர் தொழுகைக்கு செல்லாதா முஸ்லிம்களை நோக்கிப் பாடும் பாட்டை, இந்துக்கள் உருகி,உருகி பாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

     ”இறைவனிடம் கையேந்துங்கள்”  பாடலை இஸ்லாமியர்கள் பாடியதை விட, இந்துக்கள் பாடித்தான் நான் அதிகம் பார்த்திருக்கிறேன். இந்தப் பாடல் ஒரு முஸ்லிம், முஸ்லிம்களுக்காக பாடியது என்று அறிந்தும் கூட இந்துக்கள் பாடுகிறார்கள். இனிமேலும் பாடுவார்கள்.  நாகூர் ஹனிபாவின் சமயப் பாடல்களுக்கு இந்து சமய ரசிகர்கள் அதிகம் என்பதி யாரும் மறுக்க முடியாது. தொலைக்காட்சிகளில் அவர் பாடுவதைப் பார்த்தால், அது இஸ்லாமிய சமயப் பாடலாக இருந்தாலும் சரி  அதை ரசிக்கும் இந்துக்கள் மிக அதிகம்.

    இந்தியாவில் இயல்பாகவே இந்துக்களுக்கும், இஸ்லாமியருக்கும் இருக்கும் சகோதரத்தன்மையை,  நாகூர் ஹனிபா தன் குரலால் இறுக்கிப் பிணைத்துள்ளார் என்பது உண்மையிலும் உண்மை.

Tuesday 13 January 2015

சென்னை புத்தககாட்சி 2015

     இந்த ஆண்டுதான் சென்னை புத்தக காட்சிக்கு, முதல் தடவை .சென்றேன்.அ.முத்துலிங்கம் எழுதிய “கடவுள் தொடங்கிய இடம்” புத்தகத்தினை வாங்கதான் முக்கியமாக சென்றேன். காரிலும்,பைக்கிலும் உள்ளே நுழைபவர்களையும்,வெளியே செல்பவர்களையும்,குடும்பத்தோடு குதுகலமாய் வந்தவர்களையும்,சுண்டல்,சமோசாக்களையும்,YMCA வில் பள்ளிப் பிள்ளைகள் விளையாடுவதையும்,தேநீர்,குளம்பி குடிப்பவர்கள்,தட்டு அளவிலான அப்பளம் தின்பவர்கள்,நவநாகரிக மங்கைகளை(அல்லது அப்படி நினைத்துக் கொள்பவர்களை) எல்லாம்,வேடிக்கைப் பார்த்தபடி,அரங்கினுள் நுழைந்து, நேராக விகடன் பதிப்பக அரங்கிற்கு சென்று,”கடவுள் தொடங்கிய இடத்தை” தேடினேன்,கிடைக்கவேயில்லை.கடவுள்னாலே இப்படிதான்,தேடினா கிடைக்காது.இன்னும்,புத்தகக் காட்சி அரங்கிற்கு வரவில்லையாம்.

     பின் நேராக,கண்ணதாசன் பதிப்பக அரங்கு.நுழைந்தவுடனே கிடைத்துவிட்டது “எனக்கும் ஒரு கனவு” என்ற அமுல் நிறுவனத்தை நிறுவிய வர்கீஸ் குரியனின் புத்தகம்.அதையும் தேடித்தான் வந்திருந்தேன்,150 ரூபாய். அருமையான புத்தகம்.நிறைய சுவாரசியமான வேறு யாராவது இந்த புத்தகத்தை வாங்குகிறார்களா என்று, பார்த்துக் கொண்டு நின்றேன்,எல்லோரும் குண்டு,குண்டாக “அர்த்தமுள்ள இந்துமதம்” வாங்கி சென்றார்கள். கடவுள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டதற்கு இதுவே சாட்சி.கடவுளை பரிசோதிக்கிறார்கள்.

    பின் கால் வலிக்க சுற்றினேன்,”பொன்னியின் செல்வன்”,”ராசி பலன்கள்”,புத்தகங்கள் தான் அதிகம் விற்றிருக்கும் என நினைக்கிறேன். அம்பேத்கர்,கம்யூனிசம் எனவும் வாங்கினார்கள்,எனக்கு நம்பிக்கை இருக்கிறது,நிச்சயமாக படிக்க மாட்டார்கள்.

   அம்பேத்கரைப் பற்றி ஒரு புத்தகம்.ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் எழுதியது,பெயர் சரியாக நினைவில்லை,அதாவது இப்படி இருக்கும்“வரலாற்றுப் பார்வையில் அடிகள்,ஆசான்,அண்ணல்”.அற்புதமான புத்தகம்,காந்தியையும்,அம்பேத்கரையும் திருக்குறளின் வழியாக பார்ப்பது.நிறைய வரலாற்றுத் தகவல்கள்,அழகான திருக்குறள்கள்,என சுவாரஸ்யமாக இருக்கும்.அதைப் பற்றி பிற தகவல்கள் என்னிடம் இல்லை,உங்கள் கண்ணில் தட்டுப்பட்டால் தவறாமல் வாங்கி படியுங்கள்.

       பின் நண்பனுக்காகவும் சில புத்தகங்களை வாங்கிக்கொண்டு,வெளியேறுகையில் ஒருவர்,உள்ளே வருவோரிடமெல்லாம்,திரையரங்குகளில் டிக்கெட் வாங்கிகொண்டு உள்ளே விடுவார்களே,அதேபோல் டிக்கெட்டை வாங்கி கிழித்து,கொடுத்துக்கொண்டிருந்தார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை,பின் ஒருவரிடம் விசாரித்தேன்,அது நுழைவு சீட்டாம்!நான் வாங்கவில்லை.

 மறந்துவிட்டேன்.  அன்று காலை தான் சென்னை வந்தேன்,ஒரு காபி குடித்துவிட்டு,முழுவதும் விடியாத அந்த காலையில்,எழும்பூர் ரயில் நிலையம் எதிரே ஒரு தெருவோரக் கடையில், ஒரு புத்தகம் வாங்கினேன், “டிங்கில் ஸ்டார்”.